41.தமிழக அமைச்சரவை ஒரு பார்வை: பகுதி-2

தகவல் தொழில்நுட்ப துறை

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப் பட்டிருக்கிறார்.காங்கிரசு கட்சியினர் தேர்தல் வாக்குறுதியாக கன்னியாகுமரியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டு வருவோம் என உறுதி அளித்து இருந்தனர். குமரி காங்கிரசு கோட்டை என்று கூறும் காங்கிரசு கட்சியினர் மற்றும் 2 தொகுதிகளில் தோற்று வலுவிழந்து போயிருக்கும் திமுகவை வலுப்படுத்த மனோ தங்கராஜ் தகவல் தொழில்நுட்ப பூங்காவை கொண்டு வந்தே ஆக வேண்டும். அதற்காக குறைந்த செலவில் சேலம், நெல்லை போன்ற இடங்களில் அறிவிக்கப் பட்டது போல கொண்டு வரக்கூடாது, ஆண்டு க்கு 200 கோடி வீதம் 5 ஆண்டுகளில் 1000 முதலீட்டில் கொண்டு வர வேண்டும்.2004 ல் தமிழ் நாட்டின் தகவல் தொழில்நுட்ப உற்பத்தி 7500 கோடி, கர்நாடகத்தின் உற்பத்தி 10000 கோடி,அப்போது வல்லுநர்கள் சென்னை சிறந்த சாலைக்கட்டமைப்பு கொண்டதாலும்,பெங்களூர் போக்குவரத்து நெருக்கடியில் திணறுவதாலும்,தமிழ் நாட்டின் தகவல் தொழில் நுட்ப உற்பத்தி சில ஆண்டுகளுக்குள் கர்நாடகாவை முந்தும் என்று கூறினார்கள்.ஆனால் சில ஆண்டுகளுக்குள் கர்நாடகாவின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகரித்து தமிழ் நாட்டின் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியை விட இரண்டு மடங்காக உயர்ந்தது.தற்போது தமிழ் நாட்டின் தகவல் தொழில்நுட்ப உற்பத்தி சுமார் 125000 கோடி, கர்நாடகாவின் தகவல் தொழில்நுட்ப உற்பத்தி சுமார் மூன்று லட்சம் கோடியை நெருங்கும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக பெங்களூர் சென்னையை முந்தி தென்னிந்தியாவின் பெரிய நகரமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. இடையில் மகராசுட்ராவும் மும்பையில் தகவல் தொழில்நுட்பம் வளர வாய்ப்பு குறைவு என்பதை உணர்ந்து பூனே நகரை தகவல் தொழில்நுட்ப நகராக வளர்த்து எடுத்து தமிழ் நாட்டை முந்தி தகவல் தொழில்நுட்ப உற்பத்தியில் இரண்டாவது இடம் பிடித்து உள்ளது. சென்னையை மட்டுமே வைத்து தகவல் தொழில்நுட்பத்தில் முதலிடம் பிடிக்க முடியாது. எனவே கோவை, மதுரை,திருச்சி ,ஓசூர், நெல்லை, குமரி மாவட்டம் போன்ற இடங்களில் தகவல் தொழில்நுட்ப முதலீடுகளைக் கொண்டு வந்து அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ் தகவல் தொழில்நுட்ப உற்பத்தியை 10 லட்சம் கோடியாக உயர்த்தி,தமிழ் நாட்டை முதலிடம் பிடிக்க வைக்க வேண்டும்.

நீர்ப்பாசனம் மற்றும் கனிமவளத்துறை:

நீர்ப்பாசனம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக துரைமுருகன் பொறுப்பேற்று இருக்கிறார்.நீர்ப்பாசனம் துரைமுருகன் முன்பு வகித்த பொதுப்பணித்துறையின் ஒரு பகுதி என்பதால் அனுபவத்தை பயன்படுத்தி நிறைய திட்டங்களை செயல் படுத்த முடியும். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பும் போது வறட்சியான ராதபுரம் பகுதிக்கு திருப்பி விடும் திட்டம் செயல் படுத்தப் பட்டுள்ளது. இதே போன்ற திட்டங்கள் ,தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டங்கள் என ஆயிரக்கணக்கான கோடி திட்டங்களை செயல் படுத்த முடியும். கனிமவளத்துறையை பொறுத்தவரை எங்கே தோண்டினாலும் மக்கள் மத்தியில் பிரச்சினை வருவதால் பெரிதாக வாய்ப்பு இல்லை. ஆற்று மணல் அரசிடமிருந்து வாங்கப் படும் விலையை விட 10 மடங்குக்கு மேல்  அதிகமாக விற்க படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. நியாயமான விலையில் மணல் கிடைக்க செய்தால் மக்கள் போற்றுவார்கள், கட்டுமானத்துறை வளர்ச்சி அடைந்து வேலை வாய்ப்பு பெருகும்.

காவல்துறை:

தமிழகக் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்த இடத்தில் இருந்தாலும், சமீப காலங்களில் கூலி ப்படைகளின் செயல்பாடுகள் அதிகரித்து விட்டது.தொழில் செய்யும் சாதாரண மக்களிடம் பணம் கேட்பது தராவிட்டால் கொலை செய்வது என கூலிப்படைகளின் அட்டகாசம் அதிகரித்து விட்டது. திருட்டு கூட தேசிய தொழில் என்று கூறுமளவுக்கு அதிகரித்து விட்டது. குறிப்பாக தங்க நகைகள்,செல்போன் பறிப்பு போன்றவை அதிகரித்து விட்டன. மக்கள் தாங்கள் கடினமாக உழைத்த பணத்தில் நகை வாங்கி அணியக் கூட சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. இது காவல்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதை மக்கள் மறந்துவிட்டார்கள் போல தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இதையும் கேட்டு பெறவேண்டும். அதை விடுத்து 2500 ரூபாய் இலவசமாக வாங்கி விட்டு 20000 முதல் இரண்டு லட்சம் வரையான நகைகளை தொலைத்து விட்டு நிற்கிறார்கள்.குறிப்பாக கூலிப்படை கொலை வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதே கூலிப்படை குற்றங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்க காரணம் என்று கூறுகிறார்கள்.எனவே காவல்துறை மற்றும் சட்டத்துறை இணைந்து வெளியே வந்தால் மேலும் பல குற்றங்கள் புரிவார்கள் எனக்கூறி பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிப்பது, தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வது,மற்றும் கைது செய்யும் காவலர்களை தாக்குபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது போன்ற செயல்களின் மூலம் குற்ற செயல்களைக் குறைக்கலாம்.இதை வாய்ப்பாக பயன்படுத்தி தனிப்பட்ட காரணங்களுக்காக துப்பாக்கி சூடு நடத்தும் காவவர்களையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். வெளிமாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை ஈவு இரக்கமின்றி ஒழிக்க வேண்டும். காவல்துறையினரின் எண்ணிக்கையையும் பத்து லட்சமாக உயர்த்த வேண்டும்.இதன் மூலம் சுமார் 9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதோடு,சட்டம் ஒழுங்கையும் சிறப்பாக நிர்வாகிக்க முடியும். காவல்துறையினர் எண்ணிக்கை குறைவாக இருப்பதே குற்ற செயல்கள் அதிகரிப்புக்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே காவல்துறையினர் எண்ணிக்கையை அதிகரிப்பது அவசியம். சாதிக் கலவரங்கள் அவ்வப்போது ஏற்பட்டு பொது அமைதியை சீர்குலைக்கின்றன. சாதி ரவுடிகள் மீது கவனம் செலுத்தி ஒடுக்க வேண்டும். பெரும்பாலும் எல்லா ரவுடிகளும் பிணையில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள் மற்றும் தலைமறைவாக இருக்கிறார்கள்.பெரும்பாலும் ரவுடிகள்தான் சாதி சங்க விழாக்களில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்,எனவே சாதி விழாக்கள் அறவிக்கப்பட்ட உடனே இவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்தாலே சாதி விழாக்கள் அமைதியாக நடைபெறும். மேலும் கைதுக்கு பயந்து சாதி விழாக்கள் குறைந்து விடும். வட மாநிலங்களில் மதக்கலவரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் நாட்டில் பரப்புரை செய்யும் போது தமிழ் நாட்டில் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது, எனவே வடநாட்டில் மதக்கலவரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் நாட்டில் பரப்பரை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். தடைவிதிக்க முடியாத நிலையில் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் குறைவான ஆட்களைக் கொண்டு பரப்புரை நடத்த அனுமதிக்க வேண்டும்.

சட்டத்துறை:

சட்டத்துறை அமைச்சராக ரகுபதி பதவி ஏற்றிருக்கிறார்.இப்போது இருக்கும் வழக்குகளை முடிக்க வேண்டுமானால் இன்னும் 350 ஆண்டுகள் ஆகும் என்று நீதிபதிகளே கூறி இருக்கிறார்கள்.தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற வார்த்தையும் புழக்கத்தில் இருக்கிறது, அதுவும் உண்மை.நாடளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூட சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. அதுபோல் கூலிப்படைகள் மூலம் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்கள், கொலைகளுக்கென தனிநீதி மன்றங்கள் அமைத்து விரைவாக தீர்ப்பு வழங்கினாலே,கூலிப்படை செயல்பாடுகள் குறைந்து விடும். சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் இருப்பது போல். மாவட்ட நீதிமன்றங்களின் கிளையை அமைத்து வழக்குகள் விரைவாக நடைபெற உதவ வேண்டும். மற்றபடி ஏற்கனவே அறிவித்த படி கொலை,கொள்ளை,திருட்டு வழக்கில் பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ,குற்றச்செயல்கள் குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவுத்துறை:

கூட்டுறவுத்துறை மக்கள் வரிப்பணம் கையாடல் செய்வதில் முதன்மை வகிக்கிறது. ஆளுங்கட்சியினருக்கு கடன் வழங்குவது பின்னர் அதை தள்ளுபடி படி செய்வது என மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கு நியாயமாக வழங்கப்படவேண்டிய விவசாயக் கடன்கள் கூட வழங்கப்படுவதில்லை என்று புகார் வந்து உள்ளது. மக்களுக்கு நியாயமாக நகைக்கடன் விவசாயக்கடன் வழங்குவதோடு,அவற்றை திரும்பப்பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயயம் சரியாக இல்லாத நாட்களில் தவணையை வேண்டுமானால் ஒத்திப்போடலாம்.நிறைய பேர் எப்படியும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எண்ணத்தில் தவணைக் கட்டுவது இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகள் தங்களுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் தவணையை கட்டுவதில்லை. சரியாக தவணைக் கட்டிய மக்கள் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட போது தங்களது தவணை பணத்தை திரும்பத் தரவேண்டும் என்று போராடிய சம்பவங்களும் நடந்து இருக்கிறது. எனவே கூட்டுறவுத்துறை தகுதியான வர்களுக்கு கடன் கொடுத்து,கருணை உள்ளத்தோடு வசூலிக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் பள்ளிகள் தொடங்கும் போது பள்ளி மாணவர்களுக்கு கடன் வழங்கலாம், சரியாக கட்டுபவர்களுக்கு தொடர்ந்து கடன் வழங்கலாம். கூட்டுறவு வங்கிகளை அடுத்த தளத்திற்கு முன்னேற்றி செல்லலாம்.எதிர்க்கட்சியினர் கூட தாங்கள் பதவிக்கு வந்தால் கொள்ளை அடிக்கலாம் என்பதால் முறைகேடுகளைக் கண்டு கொள்ள மாட்டார்கள்.3-4 வது இடத்தில் உள்ள கட்சிகள்,அறப்போர் இயக்கம் போன்ற அமைப்புகள் விழிப்புணர்வுடன் இருந்து கூட்டுறவு வங்கிகளைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது ஏற்கெனவே கடன் வாங்கி மோசடி செய்தவர்களுக்கு கடன் வழங்காமல் இருந்தாலே பேரிழப்பை தவிர்த்து விடலாம்.

வீட்டுவசதித்துறை:

வீட்டுவசதித்துறை அமைச்சராக சு.முத்துசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் மா.கோ.ராமச்சந்திரன் அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்ததாக கூறிக்கொள்கிறார்கள்.வீடு வசதித்துறை முக்கியமானத்துறை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி,தொழில்வளர்ச்சி மக்கள் கல்வி தேவைக்காக மாவட்ட தலைநகர்கள்,சென்னை, கோவை போன்ற பெருநகர்களை நோக்கி இடம் பெயர்வது வீட்டு வாடகைகளை பெருமளவு உயர்த்தி இருக்கிறது.வீட்டு வாடகையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றால் தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேர் தங்கும் அளவுக்கு வீடுகளைக்கட்ட வேண்டும்.ஒரு அறைக்கு 2 பேர் என்று பார்த்தாலும் தமிழகம் முழுவதும் 50லட்சம் அறைகளைக் கொண்ட வீடுகளைக்கட்ட வேண்டும். இதற்கு சுமார் 50 ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இதை நிறைவேற்றலாம். இதன் மூலம் சுமார் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும்,மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். கட்டுமான த்துறை பெருமளவில் வளர்ச்சி அடையும்.வீட்டு வாடகை 50-60% குறையும். குறைவான விலையில் அறைகள் கிடைப்பதால் சென்னை மற்றும் பிற நகர்களுக்கு வந்து செல்பவர்கள் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சுற்றுலாத்துறையும்,போக்குவரத்துத்துறை வளர்ச்சி அடையும்.

நகர்புறவளர்ச்சித்துறை:

 நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சராக கே.என்.நேரு பொறுப்பு ஏற்றிருக்கிறார்.பெருநகர்களின் வளர்ச்சியே தமிழ் நாட்டின் வளர்ச்சி மற்றும் முக்கிய வேலைவாய்ப்புக்கு காரணமாக அமையும்.தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 300பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றால் 150 பில்லியன் டாலர்கள் உற்பத்தி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து வருகிறது. இதன் மூலம் நகர வளர்ச்சிக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவம் தெரிகிறது. மேலும் நகர்புறங்களில் பெருமளவு நில அபகரிப்பு 2006-2011 திமுக ஆட்சியில் நடந்ததாக புகார் வந்தது, அதுவே திமுக 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியாமல் போனதற்கு முதன்மை காரணம், எனவே முதல்வர் ஸ்டாலின் விழிப்புடன் இருந்து நில அபகரிப்பு புகார் வராமல் தடுக்க வேண்டும். மெட்ரோ ரயில், சாலைப்போக்குவரத்து போன்றவை நகர்புறவளர்ச்சிக்கு மிக முக்கியம்,இவற்றில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துக்கு என தனித்துறைகள் உள்ளன. சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் உள்ளதால் ,மெட்ரோ ரயில் துறை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ளதா?ஒதுக்கப்படாத துறைகளின் கீழ் முதலமைச்சர் வசம் உள்ளதா என தெரியவில்லை. இந்த இரண்டு துறை களும் வேறு அமைச்சகங்கள் கீழ் உள்ளதால் ,போக்குவரத்துத்துறை அமைச்சர் இரண்டு துறைகள் உடபட பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து செயல் பட வேண்டும்.


சுற்றுலாத்துறை மற்றும் மதுவிலக்குத்துறை:

சுற்றுலாத்துறை அமைச்சராக மதிவேந்தன் பொறுப்பு ஏற்றிருக்கிறார்.9 ஆண்டுகளுக்கு முன் 48 படகு நிலையங்கள் மூலம் ஆண்டு க்கு 11 கோடி வருமானம் கிடைப்பதாக அறிந்தேன். இப்போது 15 கோடி கிடைப்பதாக வைத்துக்கொள்வோம்,தமிழ் நாட்டில் இருக்கும் நீர் நிலைகள்,கடற்கரைகளின் அளவுக்கு 5ஆண்டுகளுக்கு 480-4800-48000 என்று பெருக்கி செல்லலாம். இதன் மூலம் ஆண்டுக்கு 11000 கோடி வருமானம் வரை பெறலாம். இவை மதுக்கடைகள் மூலம் வரும் வருமானத்துக்கு மாற்றாக இருக்கும். மேலும் தங்கும் விடுதிகள் போன்றவை கட்டுவதன் மூலமும் அதிக வருமானம் பெறமுடியும். மதுவிலக்குத்துறை செந்தில் பாலாஜி யிடம் உள்ளது. 2011-2016 ஆட்சியில் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்த விசுவநாதன் அதிகம் சம்பாதித்தவர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. ஸ்டாலினும் பரபரப்புரையில் செயலலிதாவுக்கு சரியாக கப்பம் கட்டாத காரணத்தால் நத்தம் விசுவநாதன் செயலலிதாவால் கட்டம் கட்டப்பட்டார் என்று கூறினார். தற்போது செந்தில் பாலாஜி கையில் மதுவிலக்குத்துறை வந்து உள்ளது. முழுமையான மதுவிலக்கு கொண்டுவர முடியாது என்று கூறுகிறார்கள்.அதை மெய்பிப்பது போல் குடிகார்கள் சிலர் சானிடைசர் குடித்து இறக்கிறார்கள்.மேலும் முழு அடைப்பு நேரத்தில் சாராயம் காய்ச்சுவது போன்ற செயல்களும் அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மதுவிலக்கு கொண்டு வந்ததால் மாநில எல்லைகளில் மது குடிப்பதற்காக பக்கத்தில் உள்ள மாநிலங்களுக்கு செல்லும் போது போக்குவரத்து நெருக்கடி,விபத்து ஏற்பட்டுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதுவே மதுவிலக்கு அமல்படுத்த முடியாததற்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது.ஆனால் மதுக்கடைகளால் வறுமை மற்றும் சமுதாயச்சீரழிவு ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.எனவே மதுக்கடைகளை வாரத்தில் 4 நாட்கள் திறந்து வைப்பது விமர்சனங்களை ஓரளவுக்கு குறைக்கும். மேலும் மற்ற, அனைத்து நாட்களிலும் கள் ,பதநீர் போன்ற பனம் பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு