நாம் தமிழர் தம்பிகளின் கதறல்கள்
சீமான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததும் நாம் தமிழர் தம்பிகள் கண்ணீர் வடித்து காணொளி வெளியிட்டு இருக்கிறார்கள். தலைவர்கள் கூட்டணி மாறும் போதும், கொள்கை மாறும் போதும் தொண்டர்களிடம் இந்த கதறல்கள் கண்டு இருக்கிறோம் என்றாலும் இம்முறை சற்று அதிகமாகவே இருக்கிறது. சீமான் கூட ஸ்டாலினை நேரடியாக பாராட்டாமல்,பெருந்தலைவர் காமராஜர் சொன்னது போல் ஆறுமாதம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றாவது கூறி இருக்கலாம்.இதற்கு முன் இதுபோன்ற கதறல்கள் ஈழ பிரச்சினையில் ஒத்த கருத்துடைய முதிமுகவின் வைகோ பொடா சிறைவாசத்திற்கு பின் செயலலிதாவுடன் வைகோ கூட்டணி வைத்த போதும் காண முடிந்தது. சீமான் சமீப காலங்களில் போராளி நிலையில் இருந்து உருமாறி அரசியல்வாதி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறார்.சீமான் கடந்த 10 ஆண்டுகளாகவே ஆளுங்கட்சியை பெரிய அளவில் எதிர்க்கவில்லை.சீமான் ஆளுங்கட்சியை தீவிரமாக எதிர்த்தது 2009-2011 ஆண்டுகளில்,ஈழப்பிரச்சினை மற்றும் அதற்கு பிந்தைய காலகட்டத்தில் ஆளுங்கட்சியை தீவிரமாக எதிர்த்த சீமான் இரண்டு முறை சிறையும் சென்றார். இரண்டாவது முறை சீமான் கைது செய்யப்பட்ட போது சீமான் ஆளுங்கட்சியினரை வேசி மகன்கள் என்று திட்டயது காரணமாகக் கூறப்பட்டது.அப்போது சீமான் அவர் வெற்றிக்கொண்டான் போன்ற பேச்சாளர்களின் பேச்சை கேட்டு வளர்ந்ததால் அவ்வாறு பேசியதாக கூறி சமாளித்தார்.2011 இல் அதிமுக ஆட்சி வந்த பிறகு சீமானுக்கு ஆளுங்கட்சியை எதிர்க்க வேண்டிய தேவை இல்லாமல் போனது.திமுக அணியினர் நாம் தமிழர் ஆளுங்கட்சியை எதிர்க்காமல் எதிர்க்கட்சியான திமுகவை எதிர்பது குறித்து கேலி கிண்டல் செய்து நாம் தமிழர் ஆதிமுகவின் இரண்டாம் அணி என அழைத்தாலும் தம்பிகள் கவலைப்படவில்லை காரணம் அவர்கள் ஈழப்போர் காரணமாக திமுக ,காங்கிரசு கட்சிகள்தான் தங்கள் முதன்மை எதிரி என்று அவர்கள் கருதியதும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் திமுகவை சீமான் எதிர்த்தது அவர்களுக்கு உவப்பை அளித்தது.பெரும்பாலும் நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் சீமானையோ,அவரது பேச்சையோ பிடித்து வந்தவர்கள் இல்லை. சீமான் ஈழத்திற்கு குரல் கொடுத்தையும்,ஈழ எதிரிகளான திமுக ,காங்கிரசை மூர்க்கத்தனமாக எதிர்த்ததையும் கண்டு கட்சிக்கு வந்தவர்கள்,இவ்வளவு நாட்களாக சீமானின் முட்டாள்தனமான கட்டுக்கதைகளால் மற்றவர்களால் ஒட்டுமொத்த கட்சியினரும் எள்ளி நகையாடப்பட்ட போதும் ,அவரின் ஈழ ஆதரவு நிலைப்பாடு காரணமாக சீமானுக்கு முரட்டு முட்டு கொடுத்து நின்றவர்கள்.கிட்டத்தட்ட திமுக ,காங்கிரசு கட்சிகளை தீண்டத்தகாதவர்களாக கருதி வந்தவர்களுக்கு, சீமான் அந்த அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து விலகி செல்வது கடுஞ்சினத்தை ஏற்படுத்தும் என்பதில் வியப்பில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக