அதிமுக ஆட்சியில் நடந்த மணற்கொள்ளையால் அரசுக்கு 153 கோடி வருவாய் இழப்பு: அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வக்கீல் ராமசுப்பு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், திருவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் தாலுகா பகுதிகளில் செம்மணல், கிராவல் மண் மற்றும் செம்மணல் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. கடந்த 2018 முதல் அதிகாரிகளின் துணையுடன் அதிகளவு மணல் கொள்ளை நடந்துள்ளது. அரசு அலுவலர்கள், தனியார் ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் தடையில்லா சான்று உள்ளிட்டவை பெறாமல், சட்டவிரோதமாக மணல் குவாரிகள் நடத்தியுள்ளனர். சுமார் 48 லட்சத்து 30 ஆயிரம் 933 கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.153 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முறையாக எந்த டெண்டர் நடவடிக்கையும் இல்லை. இந்த முறைகேடு குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் தாலுகா பகுதிகளில் நடந்த சட்டவிரோத குவாரிகள் மூலம் அள்ளப்பட்ட கனிமவளம் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு குறித்து கணக்கெடுக்கவும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் விஷ்ணுவர்த்தன் ஆஜராகி, ''அரசு அதிகாரிகள் துணையுடன் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது. இதனால், அரசுக்கு பல கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்'' என்றார்.இதையடுத்து, மனுவிற்கு கனிமவளத்துறை ஆணையர், சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய தலைவர், தூத்துக்குடி கலெக்டர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக