பொள்ளாச்சி, கோபி: மாவட்டமாக்க கோரிக்கை!
பொள்ளாச்சி, கோபிச் செட்டிப்பாளையத்தை தனி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். அதுபோலவே திருநெல்வேலியை இரண்டாகப் பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய பிறகு உரையாற்றிய முதல்வர், வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகியவை புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதற்கு ஆதரவு தெரிவித்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தின் பிற பெரிய மாவட்டங்களையும் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் மாவட்டங்கள் பிரிப்பு விவகாரத்தில் கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 15) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வேலூர் மாவட்டத்தை பிரித்தது வரவேற்புக்குரியது. ஆனால் பல ஆண்டுகளாக கோபி மற்றும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்ற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசும், முதல்வரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது தொடர்ந்து கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்படுகிறது என்ற உணர்வை உருவாக்கியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி மற்றும் கோபியை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ஈஸ்வரன், “கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஏதாவது அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்து காத்துள்ள மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. மற்ற மாவட்டங்களை எல்லாம் நிர்வாக வசதிக்காக இரண்டாக, மூன்றாக பிரித்து அறிவிப்பை வெளியிடும் முதல்வர் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களை இரண்டாக பிரித்து அறிவிக்க தயங்குவது ஏன் ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தமிழக அரசின் செயல்பாட்டையும், தமிழக முதல்வரின் அறிப்பையும் கொங்கு மண்டல மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு தமிழகத்திலிருக்கும் கொங்கு மண்டல மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த கோரிக்கைகள் ஆனது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே வைக்கப்பட்டது ஏற்கனவே நான் தெரிவித்தபடி பொள்ளாச்சி ஆனது தனி மாவட்டம் ஆவதற்கு தகுதியானது பொள்ளாச்சி அடிப்படையாகக்கொண்டு ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட உள்ளது. ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு குறைந்தது 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும். தற்போது தமிழக அரசு 5 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட ஒரு மாவட்டம் உருவாக்குவது என்ற கொள்கையைக் கொண்டு இருப்பதாகவும், தேவைப்பட்டால் அதையும் தாண்டி ஓசூர் போன்ற மாவட்டங்களை உருவாக்க தயார் என்றும் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள் .எனவே பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் இதன் மூலம் 34 லட்சம் மக்கள் தொகை கொண்ட கோயம்புத்தூரில் மக்கள் தொகை சுமார் 20 லட்சம் வரை வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் நெருக்கடிகள் குறையும். மேலும் தற்போது இந்திய அரசின் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற திட்டத்தை கொண்டு வருகிறது. இதன் மூலம் பொள்ளாச்சிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக