ஜனாதிபதி இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிகான பகுதியில் பெருந்திரளானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் மிரிஹான பிரதேசத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு முன்பாக நடத்தப்படும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு அதலபாதாளத்தில்; சகல துறைகளும் வீழ்ச்சி: எதிர்க்கட்சித்தலைவர்.
"தொலைநோக்கு இல்லாத மற்றும் செயல் திறன் இல்லாத அரசின் செயற்பாடுகளால் நாடு அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அதுவே இன்று சகல துறைகளும் வீழ்ச்சியடையக் காரணமாக உள்ளது." என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வர்த்தக சபை, கைத்தொழில் சபை, கைத்தொழில், ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையேயான சந்திப்பு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கான காரணங்கள் குறித்து உரிய கவனத்தைச் செலுத்தி அதற்கான தீர்வுகள் காணப்பட வேண்டும். கைத்தொழிலைக் கட்டியெழுப்புவதற்கான விசேட வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
அது எமது கொள்கையாகும். கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அதற்குத் தேவையான ஊக்கத்தை அளிக்க வேண்டும். ஏற்றுமதிக்கு முன்னுரிமை வழங்கும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்க வேண்டும்.
ஜனாதிபதி கோட்டாபய வீட்டில் இல்லை.
இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டில் இல்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், இந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், போராட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துண்டிக்கப்பட்ட இணைய இணைப்புக்கள்:
கொழும்பின் புறநகர் மிரிகானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றுவரும் இடத்தில் சற்றுமுன்னர் சிறப்பு அதிரடிப்படையினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையால் போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடி படையினர் அழைக்கப்படுள்ளனர்.
இதேவேளை குறித்த பகுதியில் இணைய இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல்:
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது வீட்டுக்கு செல்லும் வழியை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் இந்த தாக்குதலை நடத்தி வருவதுடன் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் அந்த இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், பொலிஸாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சமையல் எரிவாயு மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி இவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மத்தியியில் அரசாங்கம் தொடர்பாக பெரும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் கொழும்பின் பல பகுதிகளை சேர்நத மக்கள் பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
கருத்துகள்
கருத்துரையிடுக