கோவையில் சேரும் குப்பையில் மின்சாரம் தயாரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கோவையில் சேரும் குப்பையில் மின்சாரம் தயாரிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது; இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதால், அடுத்தகட்ட பணிகளில், அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேரும். குப்பை உருவாகும் இடத்திலேயே அழிக்க, பல்வேறு முயற்சி மேற்கொண்டாலும், கோடிக்கணக்கில் செலவழித்தாலும் அதன் பயன் இருப்பதில்லை.வெள்ளலுார் கிடங்கில் குவிந்துள்ள பழைய குப்பையை, 'பயோமைனிங்' முறையில் அழிக்கவும் பெருந்தொகையை செலவழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குப்பையில் மின்சாரம் தயாரித்து, இதற்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் ஹைதராபாத்தில் வெற்றிகரமாக செயல்படுத்துவதாக தகவல் கிடைத்ததால், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் , நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் , மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இன்னும், 10 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கிட்டால், குப்பை உருவாக்கமும் அதிகரிக்கும் என்பதால், ஓரிடத்தில் தேக்குவதற்கு பதிலாக, உடனுக்குடன் அழிக்கும் வகையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, கோவை மற்றும் மதுரை மாநகராட்சிகளில் செயல்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நாளொன்றுக்கு, 850 டன் குப்பை சேருகிறது. தனியார் நிறுவனம், 650 டன் வரை கையாள்கிறது. மீதமுள்ள, 200 டன் கிடங்கில் திறந்தவெளியில் கொட்டப்படுகிறது. அதை தவிர்க்க, மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போதுமானதாக இருக்காது என கருதினால், வெள்ளலுார் சுற்றுப்பகுதியை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் குப்பையையும் கணக்கிட்டு, மின்சாரம் தயாரிக்க ஆலோசனை நடந்து வருகிறது. தமிழக அரசு அனுமதி வழங்கி விட்டதால், அடுத்தகட்ட பணிகளுக்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டிருக்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக