ஹிண்டன்பர்க் பிரச்சனைக்கு மத்தியில் அதானி GVK பவர் நிறுவனத்தை வாங்க போட்டி.
அதானி குழுமம் குறித்து 32000 வார்த்தைகளில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை மூலம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்தும், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் ஆதானி சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலருக்குக் கீழ் குறைந்து உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியிலில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் செபி அதானி குழுமத்தின் கடந்த ஒரு வருடம் செய்த அனைத்து ஒப்பந்தங்களையும், அதற்கான நிதி ஆதாரங்கள் எனப் பல கோணத்தில் ஆய்வு செய்ய உள்ளது.
இந்த நிலையில் திவாலாக அறிவிக்கப்பட்ட GVK POWER என்னும் நிறுவனத்திற்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் வாங்க விருப்பம் உள்ள அனைவரும் விண்ணப்பம் அளிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் பல நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் Goindwal Sahib என்னும் பகுதியில் அமைந்துள்ள GVK POWER நிறுவனத்தை கைப்பற்ற அதானி பவர் நிறுவனம் விண்ணப்பம் கொடுத்துள்ளது. அதானி பவர் உடன் ஜின்டால் பவர், வேதாந்தா என மொத்தம் 12 நிறுவனங்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளது.
ஆக்சிஸ் வங்கி ஹைதரபாத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கின் மூலம் GVK POWER திவாலானதாக அறிவிக்கப்பட்டுத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
GVK POWER நிறுவனத்தில் பவர் பர்ச்சேஸ் ஒப்பந்தம் செய்துள்ள பஞ்சாப் மாநில மின்சார வாரியமும் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற விருப்ப விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து Sherisha Technologies, Refex Industries குரூப் நிறுவனம், மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரஷ்மி மெட்டாலிக்ஸ், கேஎல்ஜே ரிசோர்சஸ், இந்தியா கோக் அண்ட் பவர், ஐலேப்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஆர்கேஜி ஃபண்ட் மற்றும் கேப்ரி குளோபல் விருப்ப விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது.
GVK POWER சுமார் 12 நிறுவனங்களுக்கு 6584 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையை வைத்துள்ளதாக KPMG நிறுவனத்தின் தீர்வு காணும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக